ரொட்டிக்காக வந்த தகராறு.. பிறந்தநாள் அன்னிக்கு வாலிபருக்கு நேர்ந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் ரொட்டிக்காக ஏற்பட்ட தகராறில் பிறந்தநாள் அன்று ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சென்னேத்தா என்ற பகுதியை சேர்ந்தவர் சன்னி. இவர் தனது பிறந்தநாள் வருவதை முன்னிட்டு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார். விருந்தில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு ரொட்டி பரிமாற முடிவெடுத்த சன்னி, ஹோட்டலில் ஆர்டர் செய்ய நினைத்திருக்கிறார். இதனையடுத்து அதே பகுதியில் இயங்கிவரும் ஹோட்டலுக்கு சென்ற சன்னி பிறந்த நாள் அன்று தனக்கு 150 ரொட்டிகள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என ஹோட்டல் உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ரொட்டிக்கான முழு தொகையையும் சன்னி கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
விருந்து
இதன்பிறகு, தனது பிறந்தநாள் அன்று ரொட்டி வாங்க கடைக்கு சென்றிருக்கிறார் சன்னி. அவருடன் அவரது உறவினர் ஒருவரும் உடன் சென்றுள்ளார். உணவகத்தை நடத்திவந்த சீஷான் என்பவரிடம் 150 ரொட்டிகளை வழங்குமாறு கேட்டிருக்கிறார் சன்னி. அதற்கு சீஷான் 50 ரொட்டிகள் மட்டுமே தற்போது இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சன்னி, தனக்கு 150 ரொட்டிகள் வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த வாக்குவாதம் எல்லை மீறியிருக்கிறது.
ஒருகட்டத்தில் சீஷான் மற்றும் அவரது ஹோட்டலில் பணிபுரியும் நபர்கள் சேர்ந்து சன்னியை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சன்னி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி சன்னி மரணமடையவே அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இதனையடுத்து அந்த ஹோட்டல் நிர்வாகி சீஷான் மீது சன்னியின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.
புகார்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பரேலி காவல்துறையினர் ஹோட்டல் பணியாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால், சன்னி மரணமடைந்ததை அறிந்த சீஷான் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் பிறந்தநாள் அன்று ரொட்டிக்காக எழுந்த தகறாரில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
