அடேங்கப்பா..! ‘1 நிமிஷத்துக்கு 115 ஆர்டர்’.. இந்த வருஷம் அதிகம் ‘ஆர்டர்’ செய்த உணவு இதுதானாம்.. ஸ்விக்கி வெளியிட்ட லிஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் பேர் ஆர்டர் செய்த உணவு குறித்து ஸ்விக்கி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தங்களுக்கு வந்த உணவு ஆர்டர்களின் அடிப்படையில், விற்பனை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிட்ட உணவு ‘பிரியாணி’ என தெரிவித்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 115 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 6 ஆண்டுகளாக அதிக பேரால் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் வரிசையில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதனை அடுத்து தின்பண்டங்கள் வரிசையில் சமோசா மற்றும் பாவ் பஜ்ஜி முதலிடத்தில் உள்ளது. இனிப்பு வகைகளில் குலோப்ஜாமுன் மற்றும் ரசமலாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னைவாசிகள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுப் பட்டியலில் சிக்கன் பிரியாணிக்கு முதல் இடம் உள்ளது. அதனை அடுத்து சிக்கன் பிரைடு ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, பொங்கல் ஆகியவற்றை சென்னை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
சென்னை போன்றே ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ நகர மக்களும் சிக்கன் பிரியாணியை அதிகமாக ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இது தவிர ஆரோக்கியம் சார்ந்த உணவுகளுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. அதில் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மக்கள் தான் அதிகமாக ஆரோக்கியம் சார்ந்த உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.