"ஏதாவது புதுசா பண்ணிட்டே இருக்காப்ல.." 'இளம்' வீரரை புகழ்ந்து தள்ளிய 'சச்சின்'.. வேற லெவல் 'கவுரவம்'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டித் தொடர்களில் ஆடவுள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி, வரும் 26 ஆம் தேதியன்று ஆரம்பமாகமாவுள்ள நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில், இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால், இந்த முறை அதனை மாற்றியெழுத நிச்சயம் இந்திய அணி முனைப்பு காட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), இந்திய இளம் பந்து வீச்சாளர் ஒருவரை பாராட்டிப் பேசியுள்ளார். இந்திய அணியில், கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகியிருந்தார் முகமது சிராஜ் (Mohammed Siraj). அறிமுகமான முதல் போட்டியிலேயே, ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திய அவர், அனுபவமுள்ள பந்து வீச்சாளரைப் போல செயல்பட்டிருந்தார்.
இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சிராஜ், 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அது மட்டுமில்லாமல், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், சிராஜ் பற்றி பேசிய சச்சின், 'ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகமான போது, முதல் டெஸ்ட் போட்டியில் பந்து வீசியதைப் போல எனக்கு தோன்றவேயில்லை. அவரது பந்து வீச்சில், ஒரு முதிர்ச்சி இருந்தது. ஒவ்வொரு முறை நான் அவரை பார்க்கும் போதும், புதிதாக ஒன்றை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்.
அவர் ஓடி வருவதை பார்க்கும் போது, அவரது கால்களில் ஸ்ப்ரிங் ஏதேனும் இருக்கிறதா என பார்க்க தோன்றும். டெஸ்ட் போட்டியில், ஒரு நாளின் கடைசி ஓவரை அவர் வீசினால் கூட, அந்த நாளின் முதல் ஓவருடைய எனர்ஜியுடன் தான் வீசுகிறார். அவர் ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளர். அதே போல, அவரது உடல் மொழியும் பாசிட்டிவாக தான் இருக்கிறது. மிகவும் வேகமாக கற்றுக் கொள்ளும் திறனுடையவர் சிராஜ்' என இளம் வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.