"டெஸ்லா இந்தியாவுக்கு வரணும்னா".. கண்டிஷன் போட்ட மஸ்க்.. OLA நிறுவன CEO போட்ட 'பளீர்' கமெண்ட்.. வைரலாகும் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்கார் விற்பனையை அனுமதிக்காத பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படாது என எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், OLA நிறுவனத்தின் CEO போட்ட கமெண்ட் தற்போது வைரலாகி வருகிறது.
ஸ்டார்லிங்
உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் பிலிப்பைன்ஸ் நாடு ஸ்டார்லிங் திட்டத்திற்கு அனுமதி வழங்கிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவில் மஸ்கிடம்," ஸ்டார்லிங் திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என ட்விட்டரில் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் மஸ்க்,"அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் குறைவான கட்டணத்தில் அதிவேக இணையசேவையை அளிப்பதே ஸ்டார்லிங் திட்டமாகும். இதற்காக 2000 செயற்கைகோள்களை விண்ணில் ஏவும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
டெஸ்லா
உலக அளவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். சமீபத்தில், டெஸ்லா குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,"எலான் மஸ்க்கை இந்தியாவிற்கு வரவேற்கிறோம். ஆனால், சீனாவில் காரை தயாரித்து அதனை இந்தியாவில் விற்பனை செய்வது இந்தியாவிற்கு பலனளிக்காது. இந்தியாவில் கார் தொழிற்சாலைகளை அமைக்க மஸ்க் முன்வரவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்கின் ட்விட்டர் பதிவில் கேள்வியெழுப்பிய ஒருவர்,"இந்தியாவில் எதிர்காலத்தில் டெஸ்லா தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மஸ்க்,"டெஸ்லா கார் விற்பனை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத எந்த இடத்திலும் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.
தாங்க்ஸ்
இந்நிலையில், டெஸ்லா விற்பனையை அனுமதிக்காத இடங்களில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படாது என மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், OLA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இந்த பதிவில்,"Thanks, but no thanks" என கமெண்ட் செய்துள்ளார். மேலும், புன்னகை ஸ்மைலி மற்றும் இந்திய தேசிய கொடியையும் அகர்வால் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.