'அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாள் விடுமுறையா'?... 'ஏ.டி.எம் செயல்படுமா'?... 'குழப்பத்தில் மக்கள்'... ரிசர்வ் வங்கி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்று சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது.
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அந்த மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படுவது வழக்கம். அப்போது தான் பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோர் என பலரும் தங்கள் வங்கி தொடர்பான பணிகளை முறையாகத் திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும்.
இந்நிலையில் நாளை அக்டோபர் மாதம் பிறக்க உள்ள நிலையில் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்று ஒரு தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமோ என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர், ''அக்டோபர் மாதத்தில் அதிகமான பண்டிகைகள் வருகின்றன. இதனால் நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறைநாள் ஆகும்.
அதோடு 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை வழக்கமான விடுமுறையாகும். மேலும் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, 14ந்தேதி ஆயுத பூஜை, 15-ந்தேதி விஜயதசமி, 19-ந்தேதி மிலாடிநபி விடுமுறைகள் என மொத்தம் 11 விடுமுறை தினங்கள் வருகின்றன.
ஆனால் பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல செயல்படும். மேலும் ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.