அஜித்குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் முக்கிய பணியை தொடங்கியிருப்பதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிவித்துள்ளார்.
![Yuvan Shankar Raja started working on Ajith's Nerkonda Paarvai BGM score Yuvan Shankar Raja started working on Ajith's Nerkonda Paarvai BGM score](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/yuvan-shankar-raja-started-working-on-ajiths-nerkonda-paarvai-bgm-score-news-1.jpg)
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் முக்கிய பணியான பின்னணி இசை அமைக்கும் வேலையை யுவன் ஷங்கர் ராஜா தொடங்கியுள்ளார். திரைப்படங்களில் யுவன் இசையமைத்த பாடல்களை காட்டிலும், அவரது பின்னணி இசைக்கு தனித்துவம் உண்டு. வெகுஜன ரசிகர்கள் விரும்பும்படியான பின்னணி இசை அமைப்பதில் யுவனை அசைக்க முடியாது என்பதில் சந்தேகமில்லை. ‘நந்தா’, ‘ஆரண்ய காண்டம்’, அஜித்தின் ‘பில்லா’, ‘மங்காத்தா’ ஆகிய திரைப்படங்கள் யுவனின் பின்னணி இசை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
அந்த வரிசையில் தற்போது அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ பின்னணி இசை மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#NKP happy to have started BGM score :)
— Raja yuvan (@thisisysr) June 17, 2019