விஜய்யின் தளபதி 64-ல் இணைந்த பிரபல டிவி தொகுப்பாளினி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 09, 2019 10:19 AM
‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் படக்குழுவில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி இணைந்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதனை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் பேனரில் உருவாகி வரும் இப்படத்தில் தற்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் டெல்லியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து சென்னையில் நடைபெறவிருக்கும் ஷூட்டிங்கிலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே ரம்யா, மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’, அமலா பாலின் ‘ஆடை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.