‘தப்ப சரியாவே செஞ்சாலும்...!’- வைபவ் - வெங்கட் பிரபு நடிக்கும் ‘லாக்கப்’ டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சிக்ஸர்' படத்தை தொடர்ந்து நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'லாக்கப்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Vaibhav and Venkat Prabhus Lockup teaser unveiled by Jayam Ravi

‘சென்னை 28’ புகழ் நடிகர் நித்தின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்வேத் புரொடக்ஷன் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். வைபவ்-க்கு ஜோடியாக இப்படத்தில் டிவி சீரியல் பிரபலம் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் எஸ்ஜி சார்லஸ் கதை எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசருக்கு பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கம் முதலே விறுவிறுப்பு கூட்டும் த்ரில்லர் மியூசிக்கும், வைபவிடம் இருக்கும் பயம் கலந்த பதட்டமும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறது.

இந்த டீசருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக இயக்குநர் கவுதம் மேனனின் பின்னணி குரல், வழக்கமான டயலாக் டெலிவரி போல் அல்லாமல், கதையின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

கொலை சம்பவத்தின் மீதான விசாரணையும், குற்றத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வைபவின் சாமர்த்தியத்தையும் க்ரைம் த்ரில்லருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

மிகவும் தில்லான போலீஸ் கேரக்டரில் வெங்கட் பிரபு மிரட்டியுள்ளார், படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

‘தப்ப சரியாவே செஞ்சாலும்...!’- வைபவ் - வெங்கட் பிரபு நடிக்கும் ‘லாக்கப்’ டீசர்! வீடியோ