Official: STR-ன் ‘மாநாடு’ கைவிடப்படுகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 08, 2019 11:05 AM
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
![STR's Maanaadu is dropped Venkat Prabhu, Suresh Kamatchi Simbu STR's Maanaadu is dropped Venkat Prabhu, Suresh Kamatchi Simbu](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/strs-maanaadu-is-dropped-venkat-prabhu-suresh-kamatchi-simbu-news-1.jpg)
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ என்ற தலைப்பில் அரசியல் கதைக்களம் சார்ந்த திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கை மலேசியாவில் தொடங்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து காலதாமதமாகி வருவதால் சிம்பு நடிக்க இருந்த ‘மாநாடு’ திரைப்படம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி.. துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன். அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான்”.
“ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்கவில்லை. அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க முடியவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.
மேலும், வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் தனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.