SJ சூர்யா-பிரியா பவானி ஷங்கர் இணையும் படத்திற்கு கிடைத்த கிளாஸிக் படத்தின் தலைப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 10, 2019 02:46 PM
இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் SJ சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

'மான்ஸ்டர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், SJ சூர்யா நடிக்கிறார். இந்த படத்திலும், SJ சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.
இதனை நடிகர் SJ சூர்யா ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரிக்கிறார். குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும், கதிர் கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், நேற்று (அக்.9)ம் தேதி படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கி ஒரே கட்டமாக முடித்து வரும் 2020 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘பொம்மை’ என தலைப்பிட்டுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது கடந்த 1964ம் ஆண்டு எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வி.எஸ்.ராகவன், எல்.விஜயலக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிளாசிக் சஸ்பன்ஸ் த்ரில்லர் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.