உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் தனது அறிமுகப்பட நடிகரான தல அஜித் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஹிந்தியில் தனுஷ், அமிதாப் நடித்த ‘ஷமிதாப்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அக்ஷரா ஹாசன். அதனை தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நடித்த அக்ஷரா, தமிழில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தற்போது ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தில் அக்ஷரா நடித்துள்ளார். இதனிடையே, Behindwoods தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தல அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், அஜித் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், ‘விவேகம் படத்தில் தனக்கு குறைவான காட்சிகள் இருந்தது உண்மை தான், ஆனால் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால், அடுத்த படமான கடாரம் கொண்டான் படத்தில் அதிக காட்சிகளில் நடித்திருக்கிறேன்’ என கூறினார். மேலும், கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடிப்பது குறித்த எதிர்ப்பார்ப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அக்ஷரா, படக்குழுவினரின் உழைப்பை பற்றி தெரியும், அவர்களது எதிர்ப்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேனா என்ற எண்ணம் தான் இருந்தது’ என்றார்.
அத்துடன், தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்ட அக்ஷரா, அஜித் சாரின் மனிதத்துவம், அவரது செய்கைகள் அனைத்தும் ஈர்க்க வைக்கும். அவரை பற்றி பேச வார்த்தைகளே போதாது. மிகவும் கணிவானவர், செட்டில் எவ்வித அலட்டலும் இல்லாமல் இருப்பார். அவரது மன உறுதி, தன்னம்பிக்கை நமக்கு இன்ஸ்பைரிங்காக இருக்கும் என அக்ஷரா தெரிவித்துள்ளார்.
“அவர் பற்றி சொல்ல வார்த்தைகளே போதாது”- தல அஜித் பற்றி சிலாகித்த அக்ஷரா ஹாசன் வீடியோ