’ரெண்டு பேருக்கு ஒரே படுக்கையா..?’ - ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை கோரிய பாஜக MLA
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 10, 2019 01:49 PM
ஹிந்தியில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வட இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ‘பிக் பாஸ் 13’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை கோரி பாஜக எம்.எல்.ஏ அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் ஹீரோவான சல்மான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் ஹிந்தி சீசன் 13 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமாக தொடங்கியது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சியில் மிகவும் பரீட்சையமான பிரபலங்கள் பலரும் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளானர்.
இந்நிலையில், ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கோரி உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில், ‘பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவிற்கு மிகப்பெரிய கலாச்சார கேடு விளைவிக்கிறது. குடும்பத்தினரோடு அமர்ந்து பார்க்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்சேபத்துக்குரிய நெருக்கமான படுக்கைக் காட்சிகள் கொண்டுள்ளது. அதில் வேறுபட்ட சமூகம், மதத்தைச் சார்ந்தவர்கள் படுக்கையை பகிர்ந்துக் கொண்டு இந்திய கலாச்சாரத்தை இழிவுப்படுத்துகிறார்கள். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க தகுதியற்ற இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உத்தரபிரதேச நவ நிர்மாண் சேனா தலைவர் அமித் ஜானி, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நிறுத்தப்படும் வரை எந்த உணவையும் சாப்பிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், ‘இளைஞர்களை தவறாக வழிநடத்தும் நிகழ்ச்சியை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நான் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே சாப்பிடுவேன். தொலைக்காட்சியில் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இளம் தம்பதிகளை காண்பிப்பதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.