சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கி மும்பையில் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகளும் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங் பணிகள் வரும் ஜூன்.30ம் தேதியுடன் நிறைவடையும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில் ‘தர்பார்’ ஷூட்டிங்கின் போது நடிகர் ரஜினிகாந்த், தனது பேரக்குழந்தை வேத் கிருஷ்ணாவுடன் சேர்ந்து, தான் நடித்த தர்பார் காட்சிகளை மானிட்டரில் பார்த்து ரசித்த புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.