“என் அப்பா பேரு இது தான்..”- தர்பார் ரஜினிகாந்த் குறித்து உலகிற்கு உரக்கச் சொன்ன ரீல் மகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவலை பிரபல நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Rajinikanth name in Darbar film is revealed by Nivetha Thomas

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் நவம்பர்.7ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் விதமாக, இப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருக்கும் நடிகை நிவேதா தாமஸ் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். ‘இப்போது இந்த உலகம் தெரிந்துக் கொள்ள வேண்டியது.. இன்றைக்கும், என்றைக்கும் ஒரே ஒரு “ஆதித்ய அருணாச்சலம்” தான். அவர் தான் எங்க அப்பா. தர்பாரில் பாருங்கள்!” என தெரிவித்துள்ளார்.

போலீஸ் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தில் ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என தெரிகிறது. இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.