சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 09, 2019 11:34 AM
பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ஒத்த செருப்பு. பார்த்திபன் ஒருவர் மட்டுமே இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இந்த படத்துக்கு ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.
இந்த படம் தற்போது கோவாவில் நடைபெறவிருக்கிற சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட 26 படங்களில் ஒன்றாக தேர்வாகியிருக்கிறது. இதுகுறித்து பார்த்திபன் தெரிவித்ததாவது, இந்தப்படத்தை பராட்டி தங்கள் வாழ்த்துக்கள் மூலம் ரசிகர்களிடம் சேர்த்த இந்தியாவின் பெரும் நட்சத்திரங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது இந்திய திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அது இத்திரைப்பட திருவிழாவின் 50வது தங்க ஆண்டில் நடைபெற்றிருப்பது மேலும் கொண்டாட்டதிற்குரியது.
இந்நேரத்தில் தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு படைப்பான லக்ஷ்மி ராம்கிருஷ்ணன் அவர்களின் ஹவுஸ் ஓனர் படத்திற்கும் எனது அன்பு வாழ்த்துக்கள். இந்த அங்கீகாரம் மேலும் பல புது முயற்சிகளுக்கும், சோதனை முயற்சிகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது என்றார்.