பிகில், கைதிக்கு தீபாவளி சிறப்புக் காட்சிகள் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 22, 2019 01:54 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவிருக்கும் ‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இவ்விரு திரைப்படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.25ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையான அக்.27ம் தேதி பிகில், கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் சிறப்புக் காட்சி ஒளிபரப்ப அனுமதி இல்லை என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். விதிகளை மீற சிறப்புக் காட்சிகள் மற்றும் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.