Breaking: மணிரத்னத்தின் மல்டி ஸ்டார் படமான ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டின் பிளான் இதுவா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 06, 2019 04:04 PM
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.
இதனை, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் மீண்டும் தனது குரு மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார். 10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அரசனாகி ஆட்சி அமைப்பது பற்றிய பொன்னியின் செல்வன் கதையில், சோழ ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் இருக்கக் கூடிய முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, இப்படத்தில் நடிகர்கள் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஜெயராம் ஆகியோர் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது ஷூட்டிங்கிற்கு தயாராகி உள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி, வரும் டிசம்பர்.12ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து நாட்டில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முதற்கட்டமாக தொடங்கவிருக்கும் இந்த ஷூட்டிங் பணிகள் தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறும் என்றும், ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக படக்குழுவினர் தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.