சூர்யாவின் ‘காப்பான்’ ரிலீஸ் தடை நீக்கம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 19, 2019 05:08 PM
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்படம் உலகம் முழுவதும் நாளை (செப்.20) வெளியாகவிருக்கும் நிலையில், இது தன்னுடைய கதை என உரிமைக் கோரி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனமும், இயக்குநர் கே.வி.ஆனந்தும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட, தயாரிப்பு தரப்பில், வழக்கு தொடர்ந்த நபர் யார் என்று தெரியாது என்றும், விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் விளக்கம் அளித்தது. இதனை ஏற்று இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, மேல் முறையீடு செய்த ஜான் சார்லஸ், இந்த படத்தை வெளியிட தடைக் கோரினார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.