மேக்-அப் இல்லாமல் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ள ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களும், அவரது பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது நடிகை காஜல் அகர்வால், ஜெயம் ரவியின் 24வது படமான ‘கோமாளி’, ரமேஷ் அரவிந்த் இயக்கத்த்தில் உருவாகியுள்ள குயீன் பட தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ ஆகிய படங்களின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
பொதுவாக நாயகிகள் மேக்-அப் இல்லாமல் எந்த ஒரு ஃபோட்டோ ஷூட்டும் செய்ய மாட்டார்கள். ஆனால், முதன்முறையாக நடிகை காஜல் அகர்வால் மேக்-அப் ஏதும் போடாமல் ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து காஜல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நாம் வெளி தோற்றத்தால் மயங்கியிருக்கும் உலகில் வாழ்வதாலோ அல்லது சமூக ஊடகம் எதை முன்னிலைப்படுத்துகிறது என்பதில், நமது சுயமரியாதயை விழுங்கியதாலோ என்னவோ இப்போதெல்லாம் மக்களால் தங்களை யார் என்று அடையாளம் கண்டுக்கொள்ள முடிவதில்லை. கோடிக் கணக்கில் பணம் செலவு செய்து அழகு சாதனப் பொருட்களை வாங்கி நமது உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். தற்பெருமை எல்லோரிடத்திலும் உள்ளது. அந்த கூட்டத்துடன் சேர முயல்கிறோம் அல்லது தனித்து விடப்பட்டதாய் உணர்கிறோம்’.
‘ஆனால், நாம் வேறு ஒரு பிம்பத்தை பெற நினைப்பதை தவிர்த்துவிட்டு, உண்மையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம். மேக்-அப் நமது வெளி தோற்றத்தை வேண்டுமானால் அழகாக காட்டலாம், ஆனால், நாம் யார்? நமது குணாதியம் என்ன? என்பதை சொல்ல முடியுமா? நம்மிடம் இருக்கும் அழகை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உண்மையான அழகு’ என காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.