பிக் பாஸ்-க்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா கவின்?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 27, 2019 02:48 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவின். அதன் வெற்றியைத் தொடர்ந்து ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோவாக களமிறங்கினார்.

அவரது முதல் திரைப்படம் சற்று காலதாமதமாக வெளியான நிலையில், மக்களின் மனம் கவர, விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளில் சிக்கி காதலில் விழுந்த கவின், ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து கவின் சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கவின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ திரைப்பட நடிகர் தர்ஷனும், பிரபல திரைப்பட இயக்குநரும், சிவகார்த்திகேயனின் நண்பருமான நெல்சன் திலீப்குமாரும் இடம்பெற்றுள்ளனர்.
பிக் பாஸ்-க்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறாரா கவின்? வீடியோ