விஜய்யின் மாஸ்டர் - ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்.! ஆனால் இன்று.. - ரசிகர்கள் நிலை இதுதான்.
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இல்லையென்றால், படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும். விஜய்யின் ரசிகர்களும் படத்தை கொண்டாடி இருப்பார்கள். பொதுவாகவே விஜய் படங்களின் ரிலீஸுக்கு முன்பு ஏதாவது பிரச்சனை வருவது வழக்கமான ஒன்றுதான். தலைவா படம் தொடங்கி தற்போது மாஸ்டர் வரை அவரின் பட ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு ரசிகனின் மனநிலையானது எப்படி இருக்கும் என்பது சமூக வலைதளங்களை பார்த்தாலே தெரிகிறது.
விஜய்யின் ரசிகர்கள் பலவகை உண்டு. குடும்பத்துடன் நைட் ஷோ ரிலாக்ஸாக பார்க்க ஒரு கூட்டம் உண்டு. முதல் நாள் 11 மணி காட்சியை கொண்டாட்டமாக பார்க்கும் ஒரு கூட்டம் உண்டு. ஆனால் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். விடியற்காலை 5 மணி ஷோவுக்கு அடித்து பிடித்து முதல் நாளே டிக்கெட்டை வாங்கி, இரவு முழுக்க படம் அப்படி இருக்குமா, இப்படி இருக்கமா என தூக்கமின்றி இரவை கழித்துவிட்டு, 5 மணிக்கு தியேட்டரையே அலற விடுவார்கள். அப்படியான ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பெரிய ஏமாற்றம்தான்.
மற்ற விஜய் படங்களை விட மாஸ்டர் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. முதல் முறை இளம் இயக்குநரான லோகேஷுடன் கூட்டணி, கத்திக்கு பிறகு அனிருத் இசை, இதுவரை பார்க்காத ராவான விஜய் என மாஸ்டர் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது. இதற்கு பிறகு ஐடி ரெய்டு கலவரங்கள், நெய்வேலியில் கூடிய ரசிகர்கள் படை என மாஸ்டர் தன்னை தானே ப்ரொமோஷன் செய்து கொண்டது. போதா குறைக்கு விஜய்யின் சூப்பர் கூல் வாய்ஸில் குட்டி ஸ்டோரி வந்து ஹிட் அடிக்க, சிரியவர் முதல் பெரியவர் வரை மாஸ்டரை எதிர்ப்பார்க்க தொடங்கினார்கள். ஆடியோ லான்ச்சும் டீசன்ட்டாக நடந்து முடிய, படம் எப்படியும் தெறி சம்மர் ட்ரீட் தர போகிறது என நினைத்து கொண்டிருந்த நேரத்தில்தான் கொரோனா வைரஸ் என்ட்ரி.
இப்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், மாஸ்டர் பட ரிலீஸ் எப்போது என்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். ட்விட்டர் முழுக்க, ஆடை இயக்குநர் ரத்னகுமார் தொடங்கி, கடைக்கோடி ரசிகன் வரையிலும், தளபதி தரிசனத்தை காண முடியாத சோகத்தை காணமுடிகிறது. ஆனாலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்ள, ஒவ்வொரு ரசிகனும் இந்த கஷ்டத்தை ஏற்றுக்கொண்டு, வரப்போகும் கொண்டாட்டத்துக்காக காத்திருக்கிறார்கள். அப்படியான ரசிகர்களுக்கு சீக்கிரமே மாஸ்டர் ட்ரீட் கிடைக்கதான் போகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தியேட்டர்கள் கலைகட்டதான் போகிறது. அதுவரை தளபதி சொல்லியபடி, Problems will come and go.. Konjam Chill Pannu Maapi.