முதன்முறையாக விஜய்சேதுபதி மற்றும் அமலாபால் ஜோடி சேர்ந்து நடிக்கும் VSP 33 திரைப்படத்தில் பிரபல இயக்குநர் புதிதாக இணைந்துள்ளார்.
சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார்.
பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பூஜையுடன் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவிலான பிரச்சனையையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில், VSP 33 திரைப்படத்தில் ‘தடம்’ திரைப்பட இயக்குநர் மகிழ்திருமேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் மகிழ்திருமேனி நடிகராக அறிமுகமாகிறார்.
இது தொடர்பான அறிவிப்பை இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.