தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் ‘தல 60’ படம் குறித்த தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் நடித்துள்ளார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட்.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
இதைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் அடுத்தப்படமான ‘தல 60’ படத்தையும் ஹெச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல்.10ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய ஊடகம் ஒன்றுக்கு போனி கபூர் அளித்த பேட்டியில், தல 60 படத்தின் கதை பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தமிழ் படம் நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கின் போது அஜித் பற்றி தெரிந்துக் கொண்டேன். அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் பற்றி தெரிந்து ஆச்சர்யத்தில் வியந்தேன். எதிர்பாராத விதமாக த்ரில்லர் படமான தல 60 படத்தில் ஸ்பீடுக்காக அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம். ஹிந்தியில் ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் அவரை நடிக்க வைக்க ஆசை’ என கூறியுள்ளார்.
F2, F3, ஆசிய ரேஸிங் சாம்பியன் போட்டிகளில் கலந்துக் கொண்டு பட்டங்களை வென்ற அஜித், தனது படத்தில் ஓரிரு பைக் சேசிங் காட்சிகளில் நடித்தாலும், ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள். எனவே, தல 60 மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் சற்று அதிகரித்துள்ளது.