‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்கள், ஷேட்ஸ் ஆஃப் சாஹோ வீடியோக்களை தொடர்ந்து, ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய சாஹோ டீசரை நாளை (ஜூன்.14)ம் தேதி முதல் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் ஆஸ்திரியா நாட்டில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷ்ரத்தா கபூர் மற்றும் பிரபாஸ் இடையேயான ரொமாண்டிக் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து பணிகளும் விரைவில் நிறைவடைந்து இப்படம் வரும் ஆகஸ்ட்.15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
‘பாகுபலி’ போன்ற பீரியட் படத்தில் இருந்து சாஹோவின் ஸ்டைலிஷ் ஆக்ஷன் ஹீரோ லுக் என பிரபாஸ் காட்டியிருக்கும் சேஞ்ச் ரசிகர்களை வாய்ப்பிளக்கச் செய்துள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
வயலன்ட் ரசிகர்களுக்கு வேற லெவல் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்த பிரபாஸ் - சாஹோ டீசர் ரிலீஸ்! வீடியோ