அண்ணாத்த ரஜினி! வெற்றிமாறன் விடுதலை! பற்றி முதல்முறையாக மனம் திறந்த நடிகர் சூரி!
முகப்பு > சினிமா செய்திகள்அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துவிட்டது.
நடிகர் சூரி அளித்த பேட்டி:
இன்றைய பிறந்தநாள் போட்டோஷூட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிறதே?
இன்றைய பிறந்தநாள் மிகவும் சந்தோஷமான, திருப்தியான நாளாக அமைகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வருவது தான் முதலில் நிம்மதியை தருகிறது. படப்பிடிப்புக்காக தாடி எடுக்க வேண்டி வந்தது. அதற்கு முன்பு ஒரு போட்டோஷூட் எடுக்க சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன்பு தாடியில் எடுத்த போட்டோக்களே வைரலாகி வெற்றி அண்ணன் முதல் ரஜினி சார் வரை பலரும் பாராட்டினார்கள். இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் உற்சாகப்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ரசிகர்கள் என் பிறந்தநாளுக்காக பல நலத்திட்டங்கள் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்தாகவேண்டும்.
கதையின் நாயகனாக விடுதலை படம் குறித்து?
இறைவன் அருளாலும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் ஓரமாக வந்துவிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன். சின்ன வேடங்களில் நடிக்கும்போது நமக்கும் கைதட்டல் கிடைத்துவிடாதா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். காமெடியனாக பேர் வாங்க விரும்பினேன். இவை அனைத்துமே நடந்தது. கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்துகொண்டுதான் இருந்தன. காமெடியனாக கிடைத்த மக்கள் ஆதரவை தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று தவிர்த்து வந்தேன். காமெடியன் நாயகனாகும்போது காமெடி கதையில் தான் நடிக்க வேண்டும் என்பது கட்டாயமா? அதைத்தான் பிற நடிகர்களுடன் நடிக்கும்போதே பண்ணுகிறோமே என்று நினைத்திருக்கிறேன். எனவே அப்படி களம் இறங்கும்போது அது கவனிக்க வைக்கும் நம் நடிப்பை வெளிக்கொண்டுவரும் கதையாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். என் இன்னொரு பக்கத்தை காட்டும் கதைக்காக காத்திருந்தேன். ஆனால் அது வெற்றி அண்ணனின் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. அழைப்பு வந்ததே கனவு போல இருந்தது. அசுரன் படத்துக்கு முன்பு பேசியது. அசுரன் படம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகர்கள் படங்கள் வரிசைகட்ட நம் படம் தாமதம் ஆகலாம் என நினைத்தேன். ஆனால் வெற்றி அண்ணன் இந்த படத்தை தொடங்கியது அவரது பெரிய மனதை காட்டியது. அவர் அழைத்ததே ஆச்சர்யமாக இருக்க இன்னொரு ஆச்சர்யமாக உடனே அட்வான்சை கொடுத்தார். அடுத்து பல வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிப்பு என்றதும் மகிழ்ச்சி ஆனேன். முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் பகிர்ந்தேன். இதற்கு முன்னர் எவ்வளவு சம்பளம் வாங்கி இருந்தாலும் இது பல கோடிக்கு சமம் அல்லவா? நேராக சாமி படத்தின் முன்பு வைத்துவிட்டு குடும்பத்திடம் சொன்னேன். மேனேஜருக்கே அதன் பின்னர் தான் சொன்னேன். விடுதலை தொடங்கியதை விட இப்போது இன்னும் பெரிய படமாகி விட்டது. இந்த படத்தில் ஒரு நடிகனாக இருப்பதே பெரிய பாக்கியம் தான். வெற்றி அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. அவரது அயராத உழைப்பால் மிக சிறந்த படமாக தயாராகி வருகிறது. படத்தின் விளம்பரம் பேப்பரில் வந்த அன்று முந்தைய இரவு தூக்கமே வரவில்லை. சிறுவயதில் தீபாவளிக்கும் முதல் நாள் தூங்காமல் விழித்திருப்போமே அதுபோன்ற மனநிலையில் இருந்தேன். 45 ஆண்டுகளாக இசைக்கே ராஜாவாக விளங்குபவரின் இசையில் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம். அவரை சந்தித்தபோதும் மெய்மறந்தேன். அதேபோல் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது நான் செய்த புண்ணியம்.
விடுதலை படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்ததாக கேள்விப்பட்டோமே?
படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அனைவருமே தங்களது அபார உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை பொறுத்தவரை லோகேஷன் தான் முதல் நாயகன். இரண்டாவது கதை. அதன் பின்னர்தான் நடிகர்கள். 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மலை கிராமத்துக்கு செல்லவே 3 மணி நேரம் ஆகும். அந்த ஊரில் மொத்தமே 75 குடும்பங்கள் தான்.
எங்கள் படக்குழுவுக்கு சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள்.
அந்த கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் சென்று படப்பிடிப்பு எடுக்கவேண்டும். எல்லோருமே கடுமையாக சிரமப்பட்டோம். ஆனால் யாருமே முகம் சுளிக்கக்கூடவில்லை. காரணம் வெற்றி அண்ணன் மீதான அன்பு. அனைவருமே அவர்மீது அத்தனை அன்பு செலுத்துகிறார்கள்.
அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த அனுபவம்?
இந்த பிறந்தநாளை போலவே வரும் தீபாவளியும் சிறப்பானதாக அமையப்போகிறது. அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டதில் இருந்தே உற்சாகம் தொற்றிக்கொண்டது. வீட்டில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்றால் அங்கே சாருக்கும் அடுத்த அறையில் நான். சந்தோஷத்தில் பறக்கவே தொடங்கினேன். படப்பிடிப்புக்கு நான் சென்றபோதே அவர் தயாராக இருந்தார். ஒரு ரசிகனாக அவரை பார்க்க காத்திருந்தேன். அவரை சந்தித்தபோது இது கனவா? என்று கிள்ளிக்கொண்டேன். ஓ..சூரி எப்படி இருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டார். சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்லிவிட்டு அந்த படங்களை நினைவுபடுத்தி சொன்னார். அதன் பிறகு செட்டில் நான் தயங்கி நின்றாலும் இடைவெளிகளில் அழைத்து அருகில் அமர வைத்து உரையாடி கூச்சம் போக்கினார். அவர் பேச பேச சிறுவயதில் அவர் படங்களை பார்க்க பட்ட பாடுகள் தான் நினைவுக்கு வரும். தளபதி படத்தின் போது அந்த ஸ்டில்களை புது சட்டைகளில் வைத்து அயர்ன் பண்ணி ஒட்டி அணிந்துகொண்டு படத்துக்கு போனது, அதற்காக வீட்டில் வாங்கிய அடிகள் இதெல்லாம் நினைவுக்கு வரும். அவர் சினிமாவில் வரும்போது தொண்டை வலிக்கும் அளவுக்கு கத்தியிருக்கிறேன். ஒரு மிக பெரிய இயக்குனர், தலை சிறந்த சூப்பர் ஸ்டார் என அண்ணாத்த படமே என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் என்ற பிரமிப்பு எல்லாம் அவர் பழகிய விதத்தில் போயே விடுகிறது. அப்படி ஒரு டவுன் டூ எர்த் மனிதராக பழகுகிறார். அதுதான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும்போது அவர் இருக்கைக்கு அடுத்த இருக்கை. அவரே அப்படி போட சொல்லி இருக்கிறார் என்று கேள்விபட்டதும் நான் விமானத்துக்கு மேலேயே பறந்து தான் வந்தேன். அந்த பயணத்தின்போது என்னை பார்த்து ‘நான் உங்களுக்கு கம்ஃபர்டிபிளாக இருந்தேனா...? என்று கேட்க அசந்துபோனேன். நான் சினிமாவுக்கு வந்த பலனையே அடைந்துவிட்டேன். கடவுளையே பார்த்ததுபோல் இருக்கிறது என்றேன். வாழ்த்து சொன்னார்.
டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது எப்படி இருக்கிறது?
சிவாவுடன் எப்போதுமே நமது கூட்டணியில் நகைச்சுவை களை கட்டும். ஆனால் இது அப்படி இருக்காது. பதிலாக எமோஷனலான ஒரு அண்ணன் மாதிரியான கதாபாத்திரம். நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். பொறுப்பான அண்ணனாக ஒரு குணச்சித்திர வேடம்.
சூர்யாவுடன் நடிக்கும் எதற்கும் துணிந்தவன்?
அது திரையரங்குகளில் ஒரு திருவிழாவாக இருக்கும். பாண்டிராஜ் சார் படங்களுக்கே உரிய குடும்ப செண்டிமெண்டுடன் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும். வழக்கமான காமெடியனாக அல்லாமல் வித்தியாசமாக நாயகனுக்கு எதிராக இருக்கும் வேடம். கதாநாயகியின் தாய்மாமா வேடம்.
உடன்பிறப்பு படத்திலும் பேசப்படும் கதாபாத்திரமாமே?
எனக்கு பிடித்த 2, 3 படங்களில் கத்துக்குட்டி படமும் ஒன்று. அதே போல் என் மனதுக்கு நெருக்கமான அண்ணன்களில் இரா.சரவணனும் ஒருவர். உடன்பிறப்பு படத்தில் பிரிந்துபோன அண்ணன் தங்கை இரு குடும்பங்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் கதாபாத்திரம். காமெடியை தாண்டி உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்துடன் சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தும் படத்தில் இருக்கும். இரு குடும்பங்களை இணைக்க நான் எடுக்கும் முயற்சிகளால் ரசிகர்களை அழை வைத்துவிடுவேன். சசி அண்ணனுடன் கொம்பு வெச்ச சிங்கமடா படத்திலும் நல்ல கதாபாத்திரம். முகேன் ராவ் உடன் நடிக்கும் வேலன் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.
கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது பற்றி?
சமூக விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு உண்டு. அதை வெளியில் காட்டிக்கொண்டது இல்லை. கொரோனா சமயத்தில் அதை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்தது. கண்ணுக்கே தெரியாத வைரஸ் மக்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டது ரொம்பவே மனதை பாதித்தது. முன்கள பணியாளர்களின் சிரமங்களை பார்த்த பிறகே இதில் ஏதாவது நாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் செயலானது. என்னால் முடிந்ததை செய்தேன். அதற்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது என் சமூக பொறுப்பை அதிகரித்திருக்கிறது. கொரோனா நமக்கு பல பாடங்களையும் கொடுத்துவிட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. சொந்த பந்தமும் அவசியம் என்பதை உணர்த்திவிட்டது. வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையே காட்டிவிட்டது.
கதையின் நாயகன், காமெடி, குணச்சித்திரம் மூன்றிலும் பயணிக்க திட்டமா?
நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான். இது தான் என்று மட்டும் அல்லாமல் எல்லாவித கதாபாத்திரங்களிலும் நடித்து பேர் எடுக்க வேண்டும். அடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான ராம் அண்ணன் இயக்கத்தில் நிவின் பாலியுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் தொடர்ந்து கௌதம் கார்த்திக் உடன் ஒரு படத்திலும் முத்தையா அண்ணன் இயக்கத்தில் கார்த்தி அண்ணன் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறேன். என்ன கதாபாத்திரம் என்பது அடுத்த விஷயம். ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். இதுதான் என் நோக்கம். அதற்காக கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறேன்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ultimate! Soori's Latest Super-stylish Avatar With Six Pack-abs Stuns Fans - Check Out
- Superstar Rajinikanth’s Latest Viral Pic Shared By Annaatthe Member Super-excites Fans Ft Vetri
- Annaatthe Movie Superstar Rajinikanth With DOP Vetri
- Sivakarthikeyan Goundamani Viral Pic சிவகார்த்திகேயன் கவுண்டமணி
- Superstar Rajinikanth’s Annaatthe Villain Joins Prabhas’ Next Biggie Salaar; Viral Look Ft Jagapathi Babu
- Rajinikanth Annaatthe Vela Ramamurthy அண்ணாத்த வேல ராமமூர்த்தி
- Sivakarthikeyan Leaunches The Trailer Of Venkat Prabhu And Chimbudeven’s Kasada Tabara Ft Harish Kalyan, Premgi
- Dhanush Vetrimaaran Releases Ken Karunas Vaada Raasa Song
- Popular Director Producer Who Introduced Superstar Rajinikanth In Bollywood All Set To Make His Kollywood Entry Ft KC Bokadia
- Stalwart Rajinikanth Producer To Make A Tamil Film
- Superstar Annaatthe Movie Final Shooting Update
- Breaking Update From Rajinikanth's ANNAATTHE Is Here
தொடர்புடைய இணைப்புகள்
- "SURIYA, SIVAKARTHIKEYAN பெயரில் பண மோசடி" காவல்துறையில் 2D நிறுவனம் கொடுத்த புகார்
- Grace In Marana Troll Mode!! 😂❤👌#KenKarunas #Grace #Asuran #BehindwoodsMemes
- Doctor-க்கு நடுரோட்டில் நடந்த கொடூரம்!! நெஞ்சை பதபதக்கவைக்கும் சம்பவம் Dr. SUBBAIAH | #Shorts
- Fun Pani Irukaanga 😂🔥
- பலரின் உயிரை காப்பாற்றிய Doctor-க்கு நடுரோட்டில் நடந்த கொடூரம்!! நெஞ்சை பதபதக்கவைக்கும் சம்பவம்
- பழனி முருகனை தரிசித்தார் சிவகார்த்திகேயன்- வைரலாகும் வீடியோ | Sivakarthikeyan | Gugan Doss
- Theatre La Endha Padatha Pakarthuku Neenga Waiting? 😍🔥#Valimai #Beast #Annatthe #Vikram #Theatre
- Sivakarthikeyan-in Ezhuchi 🔥 #Sivakarthikeyan #SK #BehindwoodsGoldMedals #RamCharan
- Thalaivaa Vera Level😍😂
- Semma 💥🔥👌
- நான் Director-அ ன்னு கேட்டாரு... கேப்டனுக்கு பெரிய அடி... | RK Selvamani Reveals
- மாமன்னன் சிவாஜி வழிபட்ட கோயில்! | Behindwoods Om