‘பாகுபலி’ திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் கதாநாயகன் ராம் சரணுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் RRR படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட்-ம், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டைசியும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஆலியா பட் முதன் முறையாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் புனேவில் தொடங்கவிருந்த நிலையில், ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்ட நடிகர் ராம் சரணின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 3 வாரங்களுக்கு பின் மீண்டும் ஷூட்டிங் பணிகள் முழு வீச்சில் தொடங்கும் எனவும் படக்குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படமாக, 1920-களில் காலக்கட்டத்தில் நடக்கும் கற்பனை கதையாக உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகும் இப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
We regret to mention that #RamCharan confronted a minor ankle injury while working out at the gym, yesterday. The pune schedule has been called off. Back to action in 3 weeks! #RRR
— RRR Movie (@RRRMovie) April 3, 2019