இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. பொதுமக்களுக்கு டிராஃபிக் போலீசார் கொடுத்த அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கின்றன. இதனை இன்று துவக்கி வைக்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read | ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் “செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகள்”
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. இன்று மாமல்லபுரத்தில் துவங்கும் இந்த போட்டி ஆகஸ்டு 10 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் நிகழாத சாதனை இது. அதேபோல இந்திய அணி 6 அணிகளாக களமிறங்குகிறது. இந்த அணிகளில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரம்மாண்ட முறையில் நடைபெறும் இந்த போட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முதலாக
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்த ஆண்டு தான் முதன் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடத்தப்படுகிறது. முன்னதாக பெலாரசில் இந்த வருடத்துக்கான போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா - உக்ரைன் விவகாரம் காரணமாக இறுதியில் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இந்தியாவிலேயே அதிக கிராண்ட்மாஸ்டர்கள் (26) கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மோடி வருகை
நேரு அரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க இருக்கிறார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு முருகன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதனை தொடர்ந்து நாளை சென்னை அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மோடி கலந்துகொள்கிறார். இந்த விழாவை முடித்துவிட்டு 29-ம் தேதி (நாளை) காலை 11:55க்கு பிரதமர் டெல்லி திரும்புகிறார்.
இதனையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி, சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் காலை நேரங்களில் குறிப்பாகக் காந்தி மண்டபம் சாலை, காண்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் சென்னை விமான நிலையம் வரை போக்குவரத்து மெதுவாகச் செல்ல வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.