'CSK ப்ளே ஆஃப் போவதற்கு'... 'இப்படி எல்லாம்கூட இன்னும் வாய்ப்பிருக்கா?!!'... 'சென்னைக்கு சாதகமாக உள்ள வரலாறு!!!'... 'நம்பிக்கை தரும் புள்ளிவிவரம்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடர் அடுத்தடுத்த திருப்பங்களால் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் தமிழகம் தாண்டியும் அதிக ரசிகர்களை கொண்ட சிஎஸ்கே அணி இதுவரை 3 முறை சாம்பியன், 6 முறை 2வது இடம், ஒருமுறை 4வது இடம் என சூப்பர் லீக் சுற்றுக்குள் செல்லாமல் ஒருமுறைகூட தொடரிலிருந்து வெளிேயறியது இல்லை. ஆனால் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியும், ரசிகர்களும் அடுத்தடுத்து ஏமாற்றங்களையே சந்தித்து வருகின்றனர். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்திலேயே உள்ளது.
சிஎஸ்கே அணியின் நிகர ரன் ரேட்டும் மைனஸ் 0.463 என மோசமாக உள்ள நிலையில், அந்த அணி இன்னும் மீதமிருக்கும் 4 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் சிஎஸ்கே ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டி போல் நினைத்து விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே மீதமுள்ள 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே ஒட்டுமொத்தமாக 14 புள்ளிகளைப் பெற முடியும்.
இத்தனை ஆண்டு ஐபிஎல் தொடர்களில் 8 அணிகள் பங்கேற்ற 7 சீசன்களில் கடைசியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்ற அணியின் புள்ளிகள் 14க்கு மேல் இருந்தது இல்லை. இந்த முறை 8 அணிகள்தான் பங்கேற்கிறது என்பதால் சிஎஸ்கே அணி அடுத்துவரும் 4 போட்டிகளில் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லலாம் எனும் போதும் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியை குறைந்த ஓவரில் சுருட்டி, அதிகமான விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும், அல்லது சேஸிங் செய்வதாக இருந்தால் குறைந்த விக்கெட் வித்தியாசத்தில், குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்து ரன் ரேட்டைப் பலப்படுத்த வேண்டும்.
முன்னதாக 2010ஆம் ஆண்டும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் மட்டுமே எடுத்து நிகர ரன் ரேட் அடிப்படையில்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்று சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது. பின்னர் 2014ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இதேபோன்ற நிலையைச் சந்தித்துதான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது. அதேபோல கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகள் மட்டும் பெற்று ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணியைப் பின்னுக்குத் தள்ளி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது.
அதனால் ரன் ரேட்டை சிஎஸ்கே அணி வலிமைப்படுத்திக்கொண்டே வந்தால் 12 புள்ளிகள் எடுத்தால்கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. அத்துடன் முதல் மூன்று இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி போன்ற மற்ற அணிகளுடைய வெற்றி, தோல்விகளும் சிஎஸ்கே அணியைப் பாதிக்கும். அதாவது ஆர்சிபி அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த அணி அடுத்துவரும் 5 போட்டிகளிலும் தோல்விகளைச் சந்தித்தால் சிஎஸ்கே அணிக்கு வாய்ப்புள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ள நிலையில், அதில் ஆர்சிபி, கொல்கத்தா அணிகளை டெல்லி கேபிடல்ஸ் வென்றால் சிஎஸ்கே அணிக்கு அது சாதகமாக அமையும்.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை டெல்லி அணியிடம் தோற்க வேண்டும், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணியை வெல்ல வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வழி எளிதாகும். அதோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் புள்ளிகள் 12க்கு மேல் செல்லக்கூடாது. இந்த 3 அணிகளில் ஏதாவது ஒரு அணி 14 புள்ளிகள் பெற்றால்கூட சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்வது கடினமாகி, நிகர ரன் ரேட்டை சிஎஸ்கே அணி தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டிய நிலையே ஏற்படும்.