46 அடி உயரம்.. வெடித்துச் சிதறிய உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி.. சிறிய தவறால் ஏற்பட்ட பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் உலகின் மிகப்பெரிய உருளை அக்வேரியம் திடீரென உடைந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினின் மிட்டே மாவட்டத்தில் ஒரு வணிக வளாகத்தில் ரேடிசன் ஹோட்டல் மற்றும் அக்வாரியம் உள்ளது. இந்த அக்வேரியத்தில் 1500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இந்த உருளை அக்வேரியம் திடீரென திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் மீன்காட்சி தொட்டியில் இருந்த 1 மில்லியன் லிட்டர் நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அந்த ஹோட்டலில் வசித்துவரும் மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்திய அதிகாரிகள் பின்னர் அங்கிருந்த கண்ணாடி உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை அங்கிருந்த அகற்றினர்.
சீ லைஃப் பெர்லின் என்று அழைக்கப்படும் இந்த மீன் காட்சி தொட்டி தான் உலகின் மிகப்பெரிய உருளை அக்வேரியமாக கருதப்படுகிறது. இந்த வெடிப்பு பற்றி பேசிய ஹோட்டலில் தங்கி இருந்தவர்கள், அது ஒரு நிலநடுக்கம் போன்று இருந்ததாகவும் மீன்கள் வெளியேறி அப்பகுதி முழுவதும் கிடந்தது அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மோசமான விபத்தினால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்திருக்கும் அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த அக்வேரியத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்நிலையில், இந்த அக்வேரியத்தின் வெப்பநிலை பராமரிப்பு கருவிகளில் ஏற்பட்ட கோளாறே காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் பிறகே இந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சி தொட்டி வெடித்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்.