'ஆஹா... ஒன்னு கூடிட்டாங்கய்யா!.. இது எங்க போய் முடியப்போகுதோ'!?.. அமெரிக்காவில் டிக்டாக்-ஐ வாங்க புதிய கூட்டணி!.. இந்த நிலைக்கு வர 'இது' தான் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது.
இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மோதலின் ஒரு பகுதியாக சீனாவின் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார்.
அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட்டான்ஸ் 90 நாட்களில் அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட வேண்டும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தங்கள் நாட்டில் தடை விதிக்கப்படும் என டிரம்ப் காலக்கெடு விதித்தார்.
இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், டிக்டாக்கை வாங்க முயற்சித்துவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான வால்மார்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து டிக்டாக்கை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உலகின் இரண்டு பெரு நிறுவனங்கள் இணைந்து டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்க முயற்சிப்பதால் இந்த ஒப்பந்தம் வெற்றியடையலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
இதற்கிடையில், டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை 20 முதல் 30 மில்லியன் டாலர்கள் வரை விற்பனை செய்ய பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் பேரத்தில் ஈடுபட்டு வருவதால் விரைவில் டிக்டாக்கின் அமெரிக்க உரிமம் விற்பனை நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.