என்னங்க சொல்றிங்க.. இந்த தீவுகளுக்கு போக விசா தேவையில்லையா..? இது தெரியாம போச்சே..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழும் சில தீவுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமலேயே பயணிக்கலாம்.

பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. விடுமுறை நாட்களில் தொலைதூர இடங்களுக்கு சென்றுவர அனைவருக்குமே விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, லடாக் என இந்தியாவிற்குள் இப்படி பல முக்கிய சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் பலருக்கும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். ஆனால், விசா எடுக்க வேண்டும், அதற்குரிய வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே பலரும் வெளிநாட்டு சுற்றுலாக்களை தவிர்த்துவிடுகின்றனர். ஆனால், உலகில் உள்ள தீவுகள் சில விசா இல்லாமலேயே பயணிகள் உள்ளே வர அனுமதியளிக்கின்றன. அப்படி இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய தீவுகளை குறித்து பார்க்கலாம்.
மாலத்தீவுகள்
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவுகளுக்கு செல்ல உங்களிடம் விசா இருக்கவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், டிக்கெட், நீங்கள் தங்க இருக்கும் ஹோட்டல் முன்பதிவு விபரங்கள், வங்கி கணக்கு குறித்த அறிக்கை (Bank Statement) ஆகியவற்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
பிஜி
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள முக்கிய தீவான பிஜியும் இந்தியர்களை விசா இல்லாமலேயே உள்ளே செல்ல அனுமதிப்பதாக தெரிகிறது. ஒருபக்கம் கடலும் மற்றொரு பக்கம் தென்னை மரங்களும் நிறைந்து காணப்படும் இந்த தீவு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கிறது. இங்கே ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் மிகவும் பிரபலமாகும். இந்தியர்கள் விசா இல்லாமலேயே பிஜி தீவில் 4 மாதங்கள் வரை தங்கலாம் எனச் சொல்லப்படுகிறது. மாலத்தீவுகளில் உள்ள விதிமுறைகளை போலவே, டிக்கெட், நீங்கள் தங்க இருக்கும் ஹோட்டல் முன்பதிவு விபரங்கள், வங்கி கணக்கு குறித்த அறிக்கை (Bank Statement) ஆகியவற்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக உங்களது பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாத காலம் செல்லுபடியாகும் நிலையில் இருக்கவேண்டும்.
ஜமைக்கா
கரிபியன் கடலில் உள்ள நான்காவது பெரிய தீவான ஜமைக்காவும் விசா இல்லாமலேயே இந்தியர்களை அனுமதிப்பதாக தெரிகிறது. இங்கே தீவுகள் மட்டுமல்லாது, மழைக்காடுகள், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள், குகைகள் மற்றும் ஏராளமான ஆறுகளும் இருக்கின்றன. இந்தியர்கள் இங்கே விசா இல்லாமல் 14 நாட்கள் வரையில் தங்கலாமாம். பிஜியில் உள்ளதைப்போலவே ஆவணங்களை நீங்கள் வைத்திருந்தால் ஜமைக்கா உங்களை அன்போடு வரவேற்கும்.
துவாலு
தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மிகவும் அழகான தீவு இந்த துவாலு. நீலக்கடலும் அடர்த்தியான தென்னை மரங்களும் இந்த தீவின் சிறப்பம்சமாகும். இதன் அருகே குட்டி குட்டி தீவுகள் அமைந்திருக்கின்றன. துவாலு செல்ல இருந்தால் சென்று வருவதற்கான டிக்கெட், நீங்கள் தங்க இருக்கும் ஹோட்டல் முன்பதிவு விபரங்கள், வங்கி கணக்கு குறித்த அறிக்கை (Bank Statement) ஆகியவற்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக உங்களது பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாத காலம் செல்லுபடியாகும் நிலையில் இருக்கவேண்டும்.
மொரீசியஸ்
உலகின் முக்கியமான சுற்றுலா தீவுகளில் ஒன்றான மொரீசியஸ் வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. அட்டகாசமான கடற்கரைகள், மலையேற்றம் என வித்தியாசமான அனுபவத்தை சுற்றுலாவாசிகளுக்கு அள்ளித்தருகிறது மொரீசியஸ். இந்த தீவுக்கு செல்வதாக இருந்தால் உங்களது பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாத காலம் செல்லுபடியாகும் நிலையில் இருக்கவேண்டும். இங்கு சென்று வருவதற்கான டிக்கெட், நீங்கள் தங்க இருக்கும் ஹோட்டல் முன்பதிவு விபரங்கள், வங்கி கணக்கு குறித்த அறிக்கை (Bank Statement) ஆகியவற்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
இதுபோல பல தீவுகள், இந்தியர்களுக்கு விசா இல்லாமலேயே பயண வசதியை அளிக்கின்றன. பயணத்திற்கு முன்பாக, உங்களது டிராவல் ஏஜென்டிடம் தேவையான ஆவணங்கள் மற்றும் தற்போது அங்கே அமலில் இருக்கும் பயண விதிமுறைகள் ஆகியவற்றையும் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

மற்ற செய்திகள்
