ரஷ்யா உடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உக்ரைன் அதிகாரி மரணம்.. இதுதான் காரணமா..? வெளியான பரபர தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன்-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு வாரத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி வந்தாலும், மற்றொரு பக்கம் பேச்சு வார்த்தையிலும் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமுகமான முடிவுகள் எதுவும் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் சார்பில் உளவுத்துறை அதிகாரி டெனிஸ் கிரீவ் பங்கேற்றார். இவர் கீவ் நகரில் பெச்செர்ஸ்க் நீதிமன்றதுக்கு அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உளவாளியாக செயல்பட்டதற்காக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், டெனிஸ் கிரீவ் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக உக்ரைன் எம்பி அலெக்சாண்டர் டுபின்ஸ்கி தனது டெலகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு எம்பி-யான ஒலெக்சி ஹோன்சரெங்கோ தனது டெலகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘டெனிஸ் கிரீவின் தேசத்துரோகம் குறித்து உக்ரைனின் பாதுகாப்பு சேவை அமைப்புக்கு தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உக்ரைன் ராணுவ அமைச்சகத்தின் உளவு பிரிவு ஊடக சேவை தங்களது பேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளது. அதில், ‘ஒரு சிறப்பு பணியின் போது டெனிஸ் கிரீவ் கொல்லப்பட்டார்’ என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.