"ஊர் ஊரா போய் கல்லறையை பாக்குறது தான் இவரு வேலையே.." வியப்பில் ஆழ்த்தும் நபர்.. "அட, இது தான் காரணமாம்"
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகில் உள்ள அனைத்து நபர்களுக்கும், வித விதமான பழக்க வழக்கங்கள் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் பழக்க வழக்கங்கள், ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கும் நிலையில் சில பழக்கங்களை நாம் கேள்விப்படும் போது, அவை மிகவும் வினோதமாக கூட இருக்கலாம்.
அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்து வரும் செயல் தொடர்பான விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாக, உலகின் பல இடங்களை சுற்றி பார்க்க விருப்பப்படும் பலரும் பல நாடுகளில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களை பட்டியல் போட்டு, அங்கே செல்ல விரும்புவார்கள்.
ஆனால் இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த மார்க் டப்ஸ் என்பவர், நாடு நாடாக சென்று பிரபலங்களின் கல்லறைகளை தேடிச் சென்று பார்வையிடும் நூதனப் பழக்கம் ஒன்றை கொண்டுள்ளார். சியாட்டிலில் உள்ள புரூஸ் லீ கல்லறை, சீனாவில் உள்ள சேர்மன் Mao கல்லறை, வாஷிங்டன் டிசியில் உள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கல்லறை, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள மர்லின் மன்றோ கல்லறை உள்ளிட்ட பல கல்லறைகளை நேரில் சென்று பார்த்துள்ளார்.
பொதுவாக கல்லறைக்குள் என்ன இருக்கிறது என்று பலருக்கும் வியப்பாக தோன்றலாம். ஆனால், இதற்கான காரணம் பற்றி மார்க் டப்ஸ் சொல்லும் விஷயம், பலரை இன்னும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற ஒரு பயணங்கள் மூலம், தான் பள்ளியில் கற்க முடியாத வரலாற்று பாடத்தினை நேரில் பார்த்து கற்றுக் கொள்ள முடிகிறது என மார்க் கூறி உள்ளார்.
49 வயதாகும் மார்க் டப்ஸ், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஊர் ஊராக சென்று இப்படி கல்லறைகளை பார்வையிட்டு வரும் நிலையில், நிறுத்தும் எண்ணமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, 2013 ஆம் ஆண்டிலும் மார்க் டப்ஸ் கல்லறையை பார்வையிட்டு வரும் விஷயம், அதிகம் பேசு பொருளாக இருந்தது. மேலும், பயணத்தின் போது சில சமயங்களில், எதிர்பாராத சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும், அடக்கம் செய்யப்படாத மூன்று பிரதமர்களை தவிர்த்து, மற்ற அனைத்து பிரதமர்களின் கல்லறைகளுக்கும் சென்று விட்டதாகவும் மார்க் டப்ஸ் கூறியுள்ளார்.
வரலாறு மற்றும் நடப்பு நிகழ்வுகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதால், இந்த பயணத்தை மார்க் டப்ஸ் மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமில்லாமல், அவரை மிகவும் கவர்ந்த மாஸ்கோவில் உள்ள ஜோசப் ஸ்டாலின் கல்லறையை மீண்டும் பார்க்க வேண்டும் என்றும் ஆசையுடன் வலம் வருகிறார். புரூஸ்லி, ஜான் கென்னடி, வின்ஸ்டன் சர்ச்சில், மார்ட்டின் லூதர் கிங், சார்லி சாப்ளின், ஜிம் மோரிசன், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட சுமார் 25 மேற்பட்ட பிரபலங்களின் கல்லறைகளை இதுவரை மார்க் டப்ஸ் நாடு நாடாக சென்று பார்த்துள்ளார்.
இதற்காக, இந்திய மதிப்பில், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை மார்க் செலவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கல்லறைகளை மட்டும் காண்பதற்காகவே இத்தனை பணம் செலவு செய்து, அதில் வரலாற்று தகவல்களை சேகரித்து வரும் மார்க் டப்ஸ் என்ற நபரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.