5 நிமிஷ கேப்தான்.. ஒரே RUNWAY-ல் மோதுவதுபோல் சென்ற 2 ‘இந்திய’ விமானங்கள்.. துபாய் ஏர்போர்ட்டில் நடந்த பரபரப்பு நிமிடங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியா புறப்பட இருந்த இரு விமானங்கள் ஒரே ஓடுபாதையில் நேருக்குநேர் மோதுவது போல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு இரண்டு விமானங்கள் புறப்பட தயாராக இருந்துள்ளன. ஐந்து நிமிட இடைவெளியில் புறப்பட தயாராக இருந்த இந்த இரு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இரு விமானங்களும் அடுத்தடுத்து ஓடுபாதையில் புறப்பட்டு சென்றுகொண்டு இருந்துள்ளன. இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் இரு விமானங்கள் ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக ஒரு விமானத்தின் பயணத்தை நிறுத்துமாறு விமான ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியதை அடுத்து, ஹைதராபாத் செல்லும் விமானம் உடனே நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து பெங்களூரு செல்லும் எமிரேட்ஸ் விமானம் முதலில் டேக் ஆப் ஆகி புறப்பட்டு சென்றது. அடுத்ததாக ஹைதராபாத் செல்லும் விமானம் புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் ஹைதராபாத் செல்ல இருந்த விமானத்திற்கு, விமான கட்டுப்பாட்டு அமைப்பு (ஏடிசி) புறப்படுவதற்கான ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு துபாய் சர்வதேச விமான போக்குவரத்து அமைச்சகத்தை இந்திய விமான கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) கேட்டுள்ளது.