ஆத்தி.. QUARTER FINALS-ஏ முடிஞ்சு போச்சு.. ஆனா இப்பதான் போலி IPL -னு தெரிஞ்சிருக்கு!.. மோசடி கும்பலா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகளை பெரிய அளவுக்கு கொண்டு போய் சேர்த்ததில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொள்ளும் இந்த ஐபிஎல் தொடர், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான டி 20 தொடராகும்.
இந்நிலையில், இந்த டி20 ஐபிஎல் தொடரின் பெயரில் நடந்த ஒரு ஒரு போலி ஐபிஎல் தான், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், மெஹ்சனா மாவட்டத்தில் அமைந்துள்ளது மொலிபூர் என்னும் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் பலர் சேர்ந்து, மிகவும் அதிர்ச்சிகரமான செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, அப்பகுதியில் உள்ள பலரை திரட்டி, போலியாக ஐபிஎல் தொடர் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதன் படி, விவசாய கூலிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் வரை ஐபிஎல் தொடரில் அணிகள் அணியும் ஜெர்சியை போட வைத்து ஐபிஎல் போட்டியை செட் செய்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், ஒரு போட்டியில் ஆடுவதற்கு அந்த நபர்களுக்கு சுமார் 400 ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ஐபிஎல் என்ற போலி யூ டியூப் சேனல் ஒன்றையும் சம்மந்தப்பட்ட நபர்கள் உருவாக்கி, அதில், ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பியும் வந்துள்ளனர். இப்படி போலி வேலைகளில் அவர்கள் ஈடுபட்டதற்கான காரணம் தான் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
இந்த ஐபிஎல் போட்டிகளைக் காணும் ரஷ்யாவின் Voronezh மற்றும் Moscow ஆகிய நகரங்களில் உள்ள ரஷ்யர்கள், நிஜ ஐபிஎல் போட்டி என நினைத்து சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இது போக டெலிகிராம் மூலம் பெட்டிங் செய்யப்பட்டும் வந்துள்ளது. போட்டியை லைவ்வில் பார்க்கும் நபர்களுக்கு சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதற்காக, பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் மிமிக்கிரி செய்தும் கமெண்ட்ரி நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ரசிகர்கள் குரல் போன்ற ஆடியோவை இணையத்தில் இருந்து எடுத்தும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இது போக, நடுவர்கள் கையில் வாக்கி டாக்கி இருப்பது போலவும் அமைத்து, டெக்னாலஜியை பயன்படுத்தி, மைதானத்தில் ஆட்கள் இருப்பது போல உருவாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிவடைந்து சரியாக மூன்று வாரங்கள் கழித்து இந்த போலி ஐபிஎல் போட்டி நடைபெற்றுள்ளது. காலிறுதி வரை போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இது தொடர்பாக ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளது.
இந்த போலி ஐபிஎல் மூலம், ரஷ்யாவை சேர்ந்த பலரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கிய வேளையில் தான், அவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பல கோடி ரூபாய் செலவு செய்து நடைபெறும் ஐபிஎல் போட்டியை சர்வ சாதாரணமாக, ஆட்களை வைத்து போலியாக குஜராத்தை சேர்ந்தவர்கள் நடத்திய சம்பவம், பேரதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

மற்ற செய்திகள்
