'உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து தயார்!'... 'என் மகளே எடுத்துக்கொண்டுள்ளார்'... 'அதிபர் அறிவிப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகையே ஸ்தம்பிக்க செய்துள்ள கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது 20க்கும் அதிகமான தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே, உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளதாகவும், தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட பரிசோதனையில், தங்களுடைய தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாகவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்திருந்தது.
கடந்த வாரம், கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாகவும், வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்த ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் ரஷ்யா அவசரகதியில் தடுப்பூசியை அறிவிப்பதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்துக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மகள் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர் விரைவில் அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படும் எனவும் கூறியுள்ளதாக ரஷ்ய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் மருந்தின் பெயர் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
