VIDEO: ‘வேண்டாம்’!.. அவருக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க.. சைகை காட்டி விக்கெட் கீப்பரை ‘தடுத்த’ கேப்டன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் லங்காஷயர் மற்றும் யார்க்ஷயர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யார்க்ஷயர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை யார்க்ஷயர் அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 32 ரன்களும், கேரி பேலன்ஸ் 31 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த லங்காஷயர் அணி 19 ஓவர்களில் 131 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக லூக் வெல்ஸ் 30 ரன்கள் எடுத்தார். யார்க்ஷயர் அணியைப் பொறுத்தவரை மத்தேயு வெயிட் 2 விக்கெட்டுகளும், ஜோ ரூட், மத்தேயு ஃபிஷர் மற்றும் டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில், 18 பந்துகளுக்கு 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் லங்காஷயர் அணி இருந்தது. அப்போது களத்தில் நின்ற டேனி லாம்ப், பந்தை ஸ்ட்ரைட்டாக அடித்துவிட்டு சிங்கிளுக்கு ஓடினார். அந்த சமயம் நான் ஸ்ட்ரைக்கில் நின்ற ஸ்டீவன் கிராஃப்ட் ரன் எடுக்க ஓடும்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு காலில் அடிப்பட்டது. இதனால் மைதானத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அப்போது அவரை ரன் அவுட் ஆக்குவதற்காக ஜோ ரூட் விக்கெட் கீப்பரிடம் பந்தை வீசினார். ஆனால் ஸ்டீவன் கிராஃப்ட் காயமடைந்து கீழே விழுந்ததைப் பார்த்ததும், விக்கெட் கீப்பரிடம் அவுட்டாக்க வேண்டாம் என கையால் சைகை காட்டினார். இதனை அடுத்து உடனடியாக மைதானத்துக்கு வந்த மருத்துவர், ஸ்டீவன் கிராஃப்ட்டை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். இதனை அடுத்து அவர் தொடர்ந்து விளையாடினார்.
What would you have done?
Croft goes down injured mid run and @YorkshireCCC decide not to run him out#Blast21 pic.twitter.com/v1JHVGLn1T
— Vitality Blast (@VitalityBlast) July 17, 2021
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஜோ ரூட்டின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.