'இனிமேல் சைக்கிள்ல தான் போணும் போலயே'... 'விண்ணை தொட்ட பெட்ரோல் விலை'... கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான்!
முகப்பு > செய்திகள் > உலகம்சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவில் தற்போது பல நகரங்களிலும் பெட்ரோல் விலையானது 100 ரூபாய்க்கும் மேலாகச் சென்றுவிட்டது. ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானில் நிலைமை வேறு விதமாக உள்ளது.
பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலையில், கொரோனா பேரிடர் இன்னும் நிலைமையை மோசமாக்கியது. இதனால் வருவாயைப் பெருக்கும் நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ளது. இதன்காரணமாக அவ்வப்போது பெட்ரோல் விலையைப் பாகிஸ்தான் உயர்த்தி வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலையானது தாறுமாறான ஏற்றம் கண்டு வருகின்றது.
தற்போது அங்கு பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 4 ரூபாயும், ஹை ஸ்பீடு டீசல் விலையானது லிட்டருக்கு 2 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல மண்ணெண்ணெய் விலையானது லிட்டருக்கு 7.05 ரூபாயும், லைட் டீசல் எண்ணெய் விலையானது 8.82 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 127.30 ரூபாயாகவும், இதே டீசல் விலையானது லிட்டருக்கு 122.04 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று மண்ணெண்ணெய் விலையானது 99.31 ரூபாய்க்கும், லைட் டீசல் விலை 99.51 ரூபாயாக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கொரோனா காரணமாக மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், தற்போது பெட்ரோல் விலையும் அதிகரித்து வருவது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.