கொரோனாவை பத்தி செய்தி வந்ததும் மக்கள் விழுந்து விழுந்து தேடுன ‘ஒரே’ வார்த்தை.. இந்த வருசம் அதுதான் ‘டாப்’!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த ஆண்டு மக்களால் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை எதுவென மெரியம் வெப்ஸ்டர் என்ற இணையதள அகராதி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இணையதள அகராதி நிறுவனமான மெரியம் வெப்ஸ்டர் (Merriam-Webster), ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக தேடப்படும் வார்த்தையை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அந்த அகராதியில் பாண்டமிக் (pandemic) என்ற வார்த்தையை அதிகம் பேர் தேடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா முதன் முதலாக கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்தபோது, மார்ச் மாதம் 11ம் தேதி அதனை பெருந்தொற்று (பாண்டமிக்) என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அந்த ஒரு நாளில் மட்டுமே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பாண்டமிக் வார்த்தையை தேடி பார்த்தனர்.
பாண்டமிக் (pandemic) என்பது கிரேக்க வார்த்தையாகும். pan என்பது அனைத்து அல்லது ஒவ்வொன்று, demic என்பது மக்கள் என்பதை குறிக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. சில நேரங்களில் ஒரு சொல் சகாப்தத்தை உருவாக்கிவிடுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ல் இந்த அகராதியில் ‘அவர்கள்’ என்ற வார்த்தையும். 2018ல் ‘நீதி’ என்ற வார்த்தையும், 2017-ல் ‘பெண்ணியம்’ என்ற வார்த்தையும் அதிகமாக தேடப்பட்டுள்ளதாக மெரியம் வெப்ஸ்டர் தெரிவித்துள்ளது.