தோக்றோமோ ஜெய்க்றோமோ முதல்'ல சண்டை செய்யணும் .. துப்பாக்கியோட களத்துல இறங்கிய முன்னாள் 'மிஸ் உக்ரைன்' அழகி..
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 4 நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள், உயிருக்கு பயந்து மெட்ரோ சுரங்கம் மற்றும் பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டு, உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல், கடும் அவதியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம், உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.
பேச்சுவார்தை
அதே போல, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், இந்த போரில் பலி ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல உலக நாடுகள், இந்த போர் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையை மேற்கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
போராட்ட களம்
உக்ரைன் நாட்டுக்காக, அதிபர் செலன்ஸ்கி போர்க்களத்தில் களமிறங்கியதை முன் உதாரணமாக வைத்து, அந்நாட்டினைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட மக்களும் துணிச்சலுடன் போர்க்களத்தில் இறங்கி வருகின்றனர். உக்ரைன் நாட்டின் டென்னிஸ் வீரர் ஒருவர் கூட, ராணுவத்தில் இணைந்து, ரஷ்யாவுக்கு எதிராக போராட்டக் களத்தில் ஆயுதம் ஏந்தியிருந்தார்.
மிஸ் உக்ரைன்
அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான இன்னா சோவ்சுன் கூட, தனது நாட்டிற்காக துப்பாக்கியுடன் களத்தில் இறங்க தயாராக உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில், முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா என்பவரும், ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு வேண்டி, ராணுவத்தில் இணைந்துள்ளார்.
வைரலாகும் போட்டோ
பலரும் துணிச்சலுடன் போர்க்களத்தில் இறங்கியுள்ளதால், அவர்களைக் கண்டு தானும் நாட்டைக் காக்க வேண்டி, களத்தில் இறங்கியுள்ளதாக லென்னா தெரிவித்துள்ளார். இவர் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலடித்து வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, மிஸ் உக்ரைன் பட்டத்தை அனஸ்டாசியா லென்னா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.