10 நாளுக்கு முன்னாடி மகள்.. இப்போ அப்பா.. அடுத்தடுத்து நடந்த துயரம்.. மனம் தளராத கிரிக்கெட் வீரரின் அர்ப்பணிப்பு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் களமிறங்கி ஆடி வரும் இளம் வீரர்கள் பலர், அரிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.
U 19 உலககோப்பையில், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்த யாஷ் துல், முதல் ரஞ்சி போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதே போல, மற்றொரு வீரரான சகிபுல் கனி, அறிமுக போட்டியில் முச்சதம் அடித்து, யாரும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.
சோதனை காலம்
இப்படி ரஞ்சி தொடரில் ஆடி வரும் வீரர் ஒருவருக்கு, தற்போதைய காலம் சோதனை காலமாகவே அமைந்துள்ளது. பரோடா அணிக்காக ஆடி வருபவர் விஷ்ணு சோலங்கி. பரோடா மற்றும் சண்டிகர் அணிகள் மோதிய போட்டியில், சதமடித்து அசத்தியிருந்தார் இவர்.
உயிரிழந்த மகள்
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தான், விஷ்ணு சோலங்கிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த மறுநாளிலேயே உயிரிழந்து போயுள்ளது. இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த விஷ்ணு, அந்த சமயத்தில் ரஞ்சி போட்டி ஒன்றில் இருந்து விலகிக் கொண்டார். அடுத்த சில நாட்களில் மீண்டும் அணியுடன் இணைந்து கொண்ட அவர், சண்டிகாருக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியிருந்தார்.
அடுத்த அதிர்ச்சி
இதனிடையே, மற்றொரு அதிர்ச்சி தகவல், விஷ்ணுவிடம் வந்து சேர்ந்துள்ளது. அவர் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, அவரை பரோடா அணி நிர்வாகம் அழைத்துள்ளது. அவருடைய தந்தை இறந்ததாக அணியினர் தெரிவித்த போது, விஷ்ணு சற்று வேதனை அடைந்துள்ளார். இருந்த போதும், போட்டி முடிவடைந்த பின்னர், நான் திரும்பி செல்கிறேன் என விஷ்ணு தெரிவித்துள்ளார்.
தந்தையின் மறைவு
தொடர்ந்து, தனது தந்தையின் இறுதி சடங்கினை வீடியோ கால் மூலம் விஷ்ணு சோலங்கி பார்த்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக, அவரின் தந்தை, நோய் வாய்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக தான், அவர் தற்போது உயிரிழந்துள்ளார். தந்தையின் மறைவு பற்றி அறிந்த பிறகும், போட்டி முடிந்த பின்னர் திரும்பி செல்வதாக அறிவித்துள்ளார் விஷ்ணு சோலங்கி.
அர்ப்பணிப்பு
29 வயதே ஆகும் விஷ்ணு, 10 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய குழந்தையை தொலைத்து விட்டு, மீண்டும் ரஞ்சி தொடரில் களமிறங்கினார். அப்படி களமிறங்கி, போட்டி முடிவடையும் முன்னரே தந்தையின் மறைவும் இளம் வீரரை வாட்டி எடுக்க, சற்று மனமுடைந்து காணப்பட்டார். இருந்த போதும், தொடர்ந்து கிரிக்கெட் ஆடிய அவரின் அர்ப்பணிப்பு உணர்வு பற்றி, பலரும் பாராட்டி வருகின்றனர்.