'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய வம்சாவளி அமெரிக்க கண் மருத்துவர் அமீத் கோயல் (57). இவர் ஏற்கெனவே 2019-ல் மருத்துவ மோசடியில் சிக்கி வழக்குகளைச் சந்தித்து வருபவர். இந்நிலையில், இவர் அமெரிக்காவில் கொரோனா நிவாரண மோசடியிலும் ஈடுபட்டு 6,30,000 டாலர்கள் ஈட்டியதாகப் புதியக்குற்றச்சாட்டில் சிக்க இவர் மீது வழக்குகளின் பிடி இறுகுகிறது.

கொரோனா வைரஸ் காலத்தில் வர்த்தகர்கள், சிறுவணிகர்கள் யாரையும் வேலையை விட்டு அனுப்பக் கூடாது என்பதற்காக அமெரிக்காவில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், பிற செலவுகளுக்காகவும் கடனுதவி திட்டத்தை அறிவித்துள்ளது. இது பலரது வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டதாகும். இதில் புகுந்து சில இந்திய மருத்துவர்கள் ஊழலையும் மோசடியையும் செய்வது அங்கு மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.
நியூயார்க்கைச் சேர்ந்த அமித் கோயல் நவம்பர் 2019-ல் மருத்துவ மோசடியில் சிக்கினார். பொய் அறிக்கைகள், போலி ஆவணங்கள் என்று இவர் மீது வழக்குகள் பாய தற்போது விசாரணைக்கு முந்தைய விடுவிப்பில் இருந்து வருகிறார்.
நியூயார்க் அட்டார்னி ஜெனரல் ஆத்ரி ஸ்ட்ராஸ் கூறும்போது, ஏற்கெனவே கிரிமினல் குற்றவாளியான இவர், கொரோனா வைரஸ் நிவாரணத்திலும் புகுந்து தன் கைவரிசையைக் காட்டி 6 லட்சத்து 30,000 டாலர்கள் வரை சுருட்டியுள்ளார். இவரை ஜூன்26ம் தேதி கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறோம், என்றார்.
பே செக் புரடக்ஷன் என்ற இந்தத் திட்டத்தில் அமித் கோயல் தனக்கு இதற்கு முந்தைய கிரிமினல் வழக்குகள் எதுவும் இல்லை என்று போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பயனடைந்துள்ளார். பிபிபி திட்டத்தின் படி ஒருவர் ஒரு கடனை மட்டுமே பெற முடியும். அவரவர் தொழிலின் அடிப்படையில் நிறுவனத்தின் சம்பள ஊழியர்கள் பட்டியல் செலவினம் கணக்கிடப்பட்டு இந்த கடன் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரே கடனுக்காக இரண்டு விண்ணப்பங்களைச் செய்தார் அமித் கோயல். வேறு வேறு வர்த்தகப்பெயர், வேறுபட்ட இ-மெயில் முகவரிகள், வேறு பட்ட வர்த்தக எண்கள் என்று பயங்கர கோல்மால் செய்துள்ளார்.
"ஏற்கெனவே நோயாளிகள், காப்பீட்டுதாரர்கள் என்று மில்லியன் டாலர்கள் தொகை அளவுக்கு மோசடி செய்து சுருட்டிய அமித் கோயல் அதே முறையில் கொரோன நிவாரணத்தையும் சுருட்ட விண்ணப்பம் மேற்கொண்டார்" என்கிறார் அட்டார்னி ஜெனரல்.
இதனையடுத்து 6 குற்றச்சாட்டுகளின் கீழ் அமித் கோயல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கு தண்டனை கிடைத்தால் 30 ஆண்டுகள் அமித் கோயல் சிறையில் கழிக்க நேரிடும்.

மற்ற செய்திகள்
