"பூமி தாங்காது டா... விட்ருங்க டா!".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை!.. அதிர்ச்சியில் உறைந்த விலங்கின ஆர்வலர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் குவாங்சு மாகாணத்தில் ஒவ்வோரு ஆண்டும் நடைபெறும் நாய்கறி சந்தை வெகுபிரபலம். கிட்டத்தட்ட 10,000 நாய்கள் இந்த சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகும். ஆனால், இந்த ஆண்டு நேற்று தொடங்கிய நாய்கறி சந்தைக்கு மக்களிடத்தில் வரவேற்பு இல்லாததால், விலங்கின ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விலங்குகளிடத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. வௌவால் அல்லது எறும்புத்திண்ணிகளிடத்திலிருந்து, கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால், உலகமெங்கும் தடை செய்யப்பட்ட விலங்குகளை உண்ண வேண்டாமென்று மக்களுக்கு விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவிலும் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு 'கம்பெனியன்' அதாவது மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட விலங்கினம் என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் நாய்கறி விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவை ஹாங்காங் நகரத்துடன் இணைக்கும் பகுதியில் உள்ள ஷென்ஷென் நகரம், நாய்கறி விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்தது. இந்த நகரை பின்பற்றி சீனாவின் மற்ற நகரங்களும் நாய்கறிக்கு தடை விதிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், யூலின் நகரில் நடைபெறும் நாய்கறி சந்தைக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. அதே சமயத்தில், இந்த ஆண்டுக்கான நாய்கறி சந்தை ஜூன் 21- ந் தேதி தொடங்கினாலும், மக்களிடத்தில் வரவேற்பு இல்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீன மக்கள் நாய்கறி உண்ண ஆர்வம் காட்டவில்லை. கொரோனா பரவல் காரணமாக நாய்கறியை கண்டு மக்கள் தெறித்து ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து ஹ்யூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் சீன பிரிவின் கொள்கை வகுப்பாளர் பீட்டர் லீ கூறுகையில், "விலங்குகளின் நலனுக்காக மட்டுமல்லாமல், மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு யூலின் நகரம் மாறும் என்று நான் நம்புகிறேன். திருவிழா என்ற பெயரில் கூட்டமாக மக்களை சந்தைகள் மற்றும் உணவகங்களில் அனுமதிப்பது பொது சுகாதாரத்துக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. நாய் இறைச்சிக்கு தடை விதிப்பது என்பது சீனாவில் உடனடியாக செய்ய முடியாவிட்டாலும், நீண்ட காலத்திலாவது நாய்கறி விற்பனையை தடை செய்ய வேண்டும்" என்றார்.
பண்டைய காலத்திலிருந்தே நாய்கறியை உண்ணும் வழக்கம் சீனர்களிடத்தில் இருந்துள்ளது. நாய்கறி மட்டுமல்ல வௌவால், எறும்புத்தின்னி போன்ற தடை செய்யப்பட்ட விலங்கினங்களையும் சீனர்கள் உண்ணத் தயங்குவதில்லை. கொரோனா வைரஸ் உருவானதாக சொல்லப்பட்ட வூகான் நகரத்திலுள்ள வனவிலங்குச் சந்தையிலிருந்துதான் அந்த வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது.