'இந்தியர்கள் உட்பட 13,000 பேர் வேலை செய்யத் தடை'... 'கொரோனா அச்சுறுத்தலால்'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரிசோதனையை முறையாகச் செய்யாத இந்தியர்கள் உள்பட 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் கண்டிப்பாக வெளிநாட்டினர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் அவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றத் தடைவிதிக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கென ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் பிரத்யேக கோட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் அந்த கோட் பச்சை நிறத்துக்கு மாறிவிடும், இல்லாவிட்டால் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
அந்த வகையில் 13 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் பிரத்யேகமாக வழங்கப்பட்ட ஸ்டேட்டஸ் கோட் சிவப்பு நிறத்திலேயே இருப்பதால், மற்ற தொழிலாளர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில், அந்த 13 ஆயிரம் தொழிலாளர்களும் தொடர்ந்து பணியாற்ற தடை விதித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விதிமுறைப்படி அந்த 13 ஆயிரம் தொழிலாளர்களும் கடந்த 5ஆம் தேதிக்குள் தங்களின் பரிசோதனையை முடித்திருக்க வேண்டுமெனவும், அவர்கள் அனைவரும் இனிமேல் கொரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த 13 ஆயிரம் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த விதிமுறை அங்கு நடைமுறைக்கு வந்துள்ளதால், ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களே நினைவூட்டி விடுமுறை அளித்து வருகின்றன என்பதும், சிங்கப்பூரில் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.