"ஆரம்பத்துல சாதாரணமா தான் நெனச்சோம்.. இனி அத சரிபண்ண முடியாது".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் மோதிய விண்கல்.. வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா விண்ணில் ஏவிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் சிறிய விண்கல் மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய முடியாது எனவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஜேம்ஸ் வெப்
பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக பொதுவாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது. இருப்பினும் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு நம்மால் இன்னும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பல வருட மர்மத்தை வெளிக்கொண்டுவரவே ஜேம்ஸ் வெப் எனப்படும் தொலைநோக்கியை 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி) செலவில் உருவாக்கியது நாசா.
கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. இது, முன்னர் நாசாவால் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி போல 100 மடங்கு சக்திவாய்ந்தது.
நட்சத்திரக்கூட்டம்
கடந்த வாரம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட SMACS 0723 என்ற நட்சத்திர கூட்டத்தின் (Cluster) படத்தினை நாசா வெளியிட்டது. இந்த நட்சத்திர கூட்டம் பூமியில் இருந்து 4.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. ஆனால், இது வெறும் துவக்கம் தான் எனவும் 13 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை எதிர்காலத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் எடுத்து அனுப்ப இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
விண்கல்
இந்நிலையில், கடந்த மே மாதம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மீது 6 சிறிய விண்கல் மோதின. திறந்த வடிவமுடைய இந்த தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிலியம் - தங்க தகடுகளில் சி-3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை இந்த விண்கல் தாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தாங்கள் நினைத்ததை விட விண்கல்லினால் தாக்குதல் பெரிதாக இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த விண்கல் தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தினை சரி செய்ய முடியாது எனவும், இது மிகச்சிறிய அளவில் அதன் திறனை பாதிக்கலாம் என்றாலும் அதனை அளவிட முடியாது எனவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் விண்கல் மோதியது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
