'ஒரே கிராமத்தில் 400 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று'... '2 வாரங்களில் 500 பேர் பாதிப்பு'... 'அதிர வைத்த மருத்துவர்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 17, 2019 12:50 PM

ஒரே கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட, 500 பேருக்கும் மேல் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About 500 people test positive for HIV in Pakistan district

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கனாவின் புறநகர் பகுதியில் உள்ளது வஸாயோ கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட பலர் அடிக்கடி காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடல்நிலை பாதிப்படைந்து வரும் சுமார் 13, 800 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் 410 குழந்தைகள் மற்றும் 100 பெரியவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டப்போது, தவறான உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால், தொற்று பரவியது தெரியவந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலரது குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 500-க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டடுள்ளனர். 

இந்த விவகாரத்தில் அந்தப் பகுதியில் க்ளினிக் வைத்துள்ள குழந்தைகள் மருத்துவரான முசபர் கங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வேண்டுமென்றே அவர் நோய் தொற்றை பரப்பினாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பணத்தை சேமிப்பதற்காக, மருத்துவர்கள் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்கு சோதனை செய்ய பயன்படுத்தியதே எச்.ஐ.வி தொற்றுக்கான முக்கிய காரணம் என சிந்த் மாகாண எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். 'நாங்கள் உதவியற்றவர்கள் என கதறும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது' என வருந்துகின்றனர்.

எச்.ஐ.வி-யை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாகிஸ்தானில், 2017 ல் மட்டும் சுமார் 20,000 புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஆசியாவில் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.

Tags : #PAKISTAN #HIV #CHILDREN