'சும்மா இருந்தவங்கள சொரண்டி விட்டுட்டாங்க'!.. ஐசிசியின் அதிரடி முடிவால்... டி20 உலகக் கோப்பையில் திடீர் திருப்பம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையில் பங்குபெறும் அணிகள் குறித்து ஐசிசி அதிரடி முடிவை எடுத்துள்ளது.
உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 போட்டிகள் பெரும் விருந்து படைத்து வருகின்றன. பவுண்டரிகள், சிக்ஸர்கள் என ரன் மழையையே அவர்கள் பெரியளவில் விரும்புகின்றனர். அவர்களின் உற்சாகத்திற்கு தீனி போடும் விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் டி20 உலகக்கோப்பை நடத்தப்பட்டு வருகிறது.
உலகக்கோப்பை தொடருக்காக தற்போது வரை 16 நாடுகளை சேர்ந்த அணிகள் ஐசிசி-ஆல் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகிறது. இந்நிலையில், அதன் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த ஐசிசி முடிவு செய்துள்ளது. டி20 வடிவ கிரிக்கெட்டை உலகளவில் இன்னும் பிரபலப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. ஆனால், இந்த தொடரில் வழக்கம் போல 16 அணிகள் மட்டுமே பங்கு பெறும் என்றும், புதிய திட்டமானது 2024ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இருந்துதான் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. அவை ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
ஏற்கனவே, மகளிர் உலகக்கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக ஐசிசி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்று 50 ஓவர் உலகக்கோப்பையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக 50 ஓவர் உலகக்கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு 16 அணிகள், 2011ம் ஆண்டு மற்றும் 2015ம் ஆண்டு தொடரில் 14 அணிகள், கடைசியாக நடைபெற்ற 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் 10 அணிகள் மற்றுமே பங்குபெற்றன.
இதற்கிடையே, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரு வேளை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டால் பல நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு பெற்று மேலும் சுவாரஸ்யமடையும்.