'முதல்வர் ஸ்டாலினின் சாய்ஸ் யாராக இருக்கும்?'... 'தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்'?... இன்று முக்கிய ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் விதம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுத் தனது செயலாளர்கள், தலைமைச் செயலாளர் எனப் பலரது நியமனம் பெரும் கவனம் பெற்றது. அதோடு பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமனமும் பேசு பொருளானது.
அதற்கு முக்கிய காரணம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பலரும் நேரடி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகும். அதிலும் குறிப்பாக அனைவரும் 40 வயதுக்கும் குறைவான அதிகாரிகள் ஆகும். இந்நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி, வரும் 30 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி என்பது இந்திய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதனால் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்தில் இந்த இரண்டு பதவிகளை வகித்து விட வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருக்கும்.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி தான் தமிழகக் காவல்துறைக்கே (Head of Police Force) தலைவராக இருப்பார். எனவே டிஜிபி பதவிக்கு பெரும் போட்டி நிலவும். அரசியல் காரணங்களுக்காக டிஜிபி நியமனம் இருக்கக் கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி சீனியாரிட்டி அடிப்படையில்தான் டிஜிபி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகளின் பட்டியலை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) தமிழக அரசு அனுப்பும்.
அந்த பட்டியலிலிருந்து சில அதிகாரிகளைத் தேர்வு செய்து தமிழக அரசுக்கு UPSC மீண்டும் அனுப்பும். அந்த பட்டியலில் இருக்கும் ஒருவரைத் தமிழக அரசு தமிழக டிஜிபியாக நியமனம் செய்யும். இந்நிலையில் டெல்லி UPSC அலுவலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில், உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தற்போது திரிபாதிக்கு அடுத்த சீனியாரிட்டி பட்டியலில் 1987-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளாக எம்.கே. ஜா, சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, பிரதீப் வி பிலிப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் 60 வயதை எட்டியதால் எம்கே ஜா ஜூலை மாதமும், பிரதீப் பிலிப் செப்டம்பர் மாதமும் ஓய்வு பெறுகின்றனர்.
சைலேந்திரபாபு, கரன்சின்ஹா அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் இந்த இருவரும் சீனியாரிட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். சஞ்சய் அரோரா 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். சென்னையில் உயர் பதவிகளை வகித்த சஞ்சய் அரோரா தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி.யாக காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார்.
/>தற்போதைய சூழலில், ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய 3 பேரில் ஒருவர் தமிழ்நாடு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் தேர்வு யாராக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.