‘தொடரும் மீட்புப் போராட்டம்’.. ‘இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்’.. ‘அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 28, 2019 10:21 AM
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்றில் சுர்ஜித் எனும் 2 வயது குழந்தை கடந்த 25ஆம் தேதி மாலை தவறி விழுந்தது. இதையடுத்து குழந்தையை மீட்கும் பணிகளில் தன்னார்வ அமைப்புகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கயிறு கட்டி மீட்கும் முயற்சி பலனளிக்காமல் போகவே, ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி அதன்மூலம் குழந்தையை மீட்கும் பணி நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
முதல் ரிக் இயந்திரம் பழுதாக, அதிக திறன் கொண்ட 2வது ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது. 64 மணி நேரத்தைக் கடந்து 4 வது நாளாகத் தொடரும் மீட்புப் பணியின் இடையே கடினமான பாறைகளால் குழி தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாறைகள் இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு கடினமாக உள்ளன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை. கணித்தபடி இரண்டு ரிக் இயந்திரங்களாலேயே முழுமையாக பள்ளம் தோண்ட முடியவில்லை. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். விரைவில் மாற்றுவழி குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தை தவறி விழுந்து 4 நாட்கள் ஆவதால் மருத்துவர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் குழிக்குள் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான பணியில் ஏற்கனவே தேர்வான 3 பேருடன் மேலும் 9 தீயணைப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
