"தைரியமா இருங்க".. தாய் மரணமடைந்த நிலையில் வடிவேலுவிற்கு ஆறுதல் கூறிய முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு.

இவரது காமெடிகள் காலங்கள் கடந்தும் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. தற்போது நடிகர் வடிவேலு, மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் 'வைகைப்புயல்' வடிவேலு நாயகனாக நடித்திருந்தார். 'டாக்டர்' ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் வடிவேலுவுடன் நடித்திருந்தனர்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்திலும் வடிவேலு நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பி.வாசு இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு, ராகவா லாரன்ஸ் மற்றும் ராதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு மரணமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 87. விரகணூரில் உள்ள வடிவேலு வீட்டில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வடிவேலுவிற்கு போன் வாயிலாக ஆறுதல் கூறியுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தனது தயார் தொடர்ந்து சளி தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொங்கல் வரையிலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் வடிவேலு. முதல்வரை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பூச்சி முருகன் உள்ளிட்டோர் போன் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாகவும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"முதல்வர் போன் பேசுனாங்க. தாய் தான் உலகத்துல முக்கியமானவங்க. நீங்க ரொம்ப பாசமா இருந்தீங்க, தைரியமா இருங்கன்னு சொன்னாரு" என்றார்.

மற்ற செய்திகள்
